நாடு முழுவதும் ஊரடங்கு… களமிறங்கிய ராணுவம்: 100 கடந்த பலி எண்ணிக்கை
நாடு முழுவதும் பரவியுள்ள கலவரத்தை ஒடுக்க காவல்துறை தவறியுள்ள நிலையில், ஊரடங்கு மற்றும் ராணுவத்தை களமிறக்க இருப்பதாக வங்காளதேச நிர்வாகம் அறிவித்துள்ளது.
எதேச்சதிகார அரசாங்கத்திற்கு
இந்த ஒரு வாரத்தில் மட்டும் மாணவர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 105 என தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி பல எண்ணிக்கையிலானோர் காயங்களுடன் மருத்துவமனைகளை நாடியுள்ளனர். இந்த விவகாரம் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் எதேச்சதிகார அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய சவாலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், பொது பாதுகாப்பை உறுதி செய்ய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் இராணுவத்தை நிலைநிறுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பிரதமரின் பத்திரிகைச் செயலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவானது உடனடியாக அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலைநகர் டாக்காவில் பொதுக் கூட்டங்களுக்கு மறுப்பு தெரிவித்து, பொலிசார் தடை விதித்தனர்.
இதனால் வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியும் என பொலிசார் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இருப்பினும், பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமான மோதல் தடுக்க முடியாமல் போனது.
தங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும் என்றே மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், இந்தக் கொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பலி
இதனிடையே, மத்திய வங்காளதேசத்தின் நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறைக்குள் நுழைந்த மாணவர் போராட்டக்காரர்கள், சிறைச்சாலைக்கு தீ வைப்பதற்கு முன்பு சிறைக்கைதிகளை விடுவித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், பல நூறு பேர்கள் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாக தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை மட்டும் 52 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களே அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அதிகாரத்தை நிலைநிறுத்தவும், அதிருப்தியாளர்களை அகற்றவும் அரசு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவதாக மனித உரிமைக் குழுக்கள் ஹசீனா அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியுள்ளது.
வியாழக்கிழமை வெளியான தரவுகளின் அடிப்படையில், நாட்டின் 64 மாவட்டங்களில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையில் கலவரம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.