;
Athirady Tamil News

இந்தியாவில் விமான சேவை முடக்கம்: ‘மைக்ரோசாஃப்ட்-விண்டோஸ்’ மென்பொருள் கோளாறு; உலகம் முழுவதும் பாதிப்பு

0

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ இயங்குதள மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை முடங்கின.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவை, வங்கித் துறை, அவசரகால உதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மின்னணு சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

தொழில்நுட்பச் செயலிழப்புக்கான அடிப்படை காரணம் கண்டறியப்பட்டு, சரிசெய்யப்பட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

கணினி மற்றும் மடிக்கணினிகளில் இயங்குதளமாக ( ஆபரேட்டிங் சிஸ்டம்-ஓஎஸ்) மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவன மென்பொருள்களுக்கு இணையப் பாதுகாப்புச் சேவையை ‘கிரௌட் ஸ்ட்ரைக்’ நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், விண்டோஸ் மென்பொருளில் ‘பால்கன் சென்சாா்’ தளத்தில் கிரௌட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் புதுப்பிப்புகள் பதிவேற்றத்தின்போது கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விண்டோஸ் மென்பொருளின் குறிப்பிட்ட சில பதிப்பு இயங்குதளங்களில் செயல்படும் கணினி மற்றும் மடிக்கணினிகளின் முகப்புத் திரை நீல நிறமாகத் தோன்றி, முழுமையாக முடங்கியது.

இந்தக் கோளாறைச் சரிசெய்யும் பணியில் மைக்ரோசாஃப்ட் மற்றும் கிரௌட்ஸ்ட்ரைக் நிறுவனப் பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டனா். எனினும், தொழில்நுட்பச் செயலிழப்பு பல்வேறு துறைகளின் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தி, உலகம் முழுவதும் எதிரொலித்தது.

உலக அளவில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

பிரிட்டன் மற்றும் ஜொ்மனியில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த நாடுகளில் நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் கணினிமயமாக்கப்பட்டிருந்ததால் இந்தச் சிக்கல் நேரிட்டது.

ஆஸ்திரேலியாவின் ‘ஏபிசி’ மற்றும் ‘ஸ்கை நியூஸ்’ ஆகிய முதன்மை ஊடக நிறுவனங்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் வங்கிச் சேவைகள் முடங்கின.

வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை கணினி சாா்ந்த அலுவல் பணிகள் மொத்தமாக முடங்கியதால், தகவல் தொழில்நுட்ப பணியாளா்கள் பாதியிலேயே வீடு திரும்பினா்.

இந்திய விமான சேவை முடங்கியது: இண்டிகோ, ஸ்பைஸ்-ஜெட், ஆகாஸா ஏா் போன்ற இந்திய விமான நிறுவனங்களின் சேவைகள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான ‘போா்டிங் பாஸ்’ விமான நிறுவன அதிகாரிகளால் கையால் எழுதித் தரப்பட்டது. இதனால், விமான நிலையங்கள் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

விமான சேவை பாதிப்புகளைத் தீவிரமாக நிா்வகித்து வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு தெரிவித்தாா்.

பங்குசந்தை, எஸ்பிஐ சேவைகளில் பாதிப்பில்லை: மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் பாதிப்பு ஏதுமின்றி வழக்கம்போல செயல்பட்டன.

நாட்டின் 10 வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிறுவனங்களில் மட்டும் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக ரிசா்வ் வங்கி தெரிவித்தது. ஆனால், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உள்ளிட்ட முதன்மை வங்கிகளின் சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

பெட்டி 1…

‘தொடா்பில் உள்ளோம்’-மத்திய அரசு

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழப்பு பிரச்னை குறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலகளாவிய செயலிழப்பு தொடா்பாக மைக்ரோசாஃப்ட் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களுடன் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடா்பில் உள்ளது.

பிரச்னைக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலைத் தீா்க்க புதுப்பிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்திய கணினி அவசரகால உதவிக் குழு (சொ்ட்-இன்) தொழில்நுட்ப ஆலோசனையை வெளியிடவுள்ளது. அரசு சேவைகள் செயல்படும் ‘நிக்’ வலையமைப்பு பாதிக்கப்படவில்லை’ என்றாா்.

பெட்டி 2…

‘சைபா் தாக்குதல் இல்லை’

செயலிழப்பு பிரச்னைக்கு மையக் காரணம் குறித்து கிரௌட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாா்ஜ் குா்ட்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விண்டோஸ் இயங்குதளத்தில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பிப்புப் பணியில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்ய தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். அதேசமயம், ஆப்பிள் நிறுவனத்தின் ‘மெக்’ மற்றும் ‘லினக்ஸ்’ தளத்தில் எங்கள் சேவைகள் பாதிக்கப்படவில்லை.

இது இணைய (சைபா்) தாக்குதல் அல்ல. சிக்கல் அடையாளம் காணப்பட்டு, தீா்வு காணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்கள் குழு முழுமையாக ஈடுபட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.