;
Athirady Tamil News

வங்கதேசத்தில் இருந்து மேலும் 550 மாணவர்கள் தாயகம் திரும்பினர்!

0

வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்களில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த பொது இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டில் மாணவா் போராட்டம் வெடித்தது. அதையடுத்து, விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த வங்கதேச உயா்நீதிமன்றம், அரசின் அந்த உத்தரவு செல்லாது என்று கடந்த 5-ஆம் தேதி அறிவித்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் கோரியும் மாணவா்கள் அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கின.

போராட்டக் களம் நாளடைவில் வன்முறையாக உருமாறி நிலைமை கட்டுபாட்டை மீறிச் சென்றுள்ளது வங்கதேசத்தில். போராட்டகாரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் அடக்குமுறையைக் கையாண்டு வருகின்றனர்.

இதையடுத்து வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் சனிக்கிழமை(ஜூலை 20) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதுவரை 978 மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 778 பேர் சாலை மார்க்கமாகவும், 200 பேர் விமானங்கள் மூலமாகவும் இந்தியா வந்தடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.