வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொடருந்து ஊழியர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தொடருந்து ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், சேவையில் இருந்து விலகியதைப் போன்று பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் (Hatton) தொடருந்து நிலையத்தில் இன்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசிய சேவை
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “இதற்குப் பிறகு தொடருந்து வேலைநிறுத்தம் இல்லை. தொடருந்து சேவை அத்தியாவசிய சேவை என வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்கள துறை தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் கலந்துரையாட வேண்டும். இல்லையேல் மக்கள் பாதிக்கப்படும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வேலையை கைவிட்டது போல் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
நாம் அனைவரும் நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும், இல்லையெனில் நாம் பொதுச்சேவை செய்ய முடியாது“ என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.