மாகாணத்தின் அதிகாரங்களில் மத்தி தலையிடுவதை அனுமதிக்க முடியாது – சுரேஷ் பிரேமச்சந்திரன்
வடக்கில் மாத்திரமன்றி நாடு முழுவதுமே , சுகாதாரத்துறை சீர்கெட்டுள்ளது. அதற்காக மாகாணத்தின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்துகிற விதமாக எவரும் செயற்பட கூடாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சுகாதார துறை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றினை வெளிப்படுத்திய வைத்தியர் அருச்சுனா இராமநாதனுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதற்காக மாகாணத்திற்கு உரிய அதிகாரங்களை கேள்விக்கு உட்படுத்தும் விதமாக செயற்பட முடியாது.
போதனா வைத்தியசாலைகள் மற்றும் சிறப்பு வைத்தியசாலைகள் மாத்திரமே மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ளன. ஏனைய வைத்தியசாலைகள் மாகாண அரசின் கீழ் உள்ளவை.
அவற்றுக்கான நியமனங்கள் மாகாண ஆளுநர் , மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மாகாண பணிப்பளார் என ஒரு ஒழுங்கின் கீழ் தான் வர வேண்டும்.
கொழும்பில் இருந்து மத்திய அரசின் நியமனங்கள் மாகாண அமைச்சின் கீழான நியமனங்களில் செல்வாக்கு செலுத்த முடியாது. அதனை அனுமதிக்கவும் முடியாது.
கொழும்பில் இருந்து மாகாணத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்து , மாகாணம் சொல்வது எதனையும் கேட்க மாட்டேன். கொழும்பு சொல்வதை மாத்திரமே கேட்பேன் என கூறுவது மாகாணத்திற்கான அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்துவதாகும்.
அதனை அனுமதிக்க முடியாது. அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் குரல் எழுப்ப வேண்டும் .
நாட்டின் சுகாதார துறை சீர்கெட்டு போயுள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. சுகாதார அமைச்சராக இருந்தவர் , தரமற்ற மருந்துகளை இறக்கிய குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனும் போதே நாட்டின் சுகாதார துறை எந்தளவு தூரம் மோசமாக உள்ளது என்பது தெரிகிறது.
அதற்காக வடக்கில் மாத்திரமே சுகாதாரம் சீர்கெட்டு உள்ளதாக விம்பத்தை உருவாக்கி மாகாணத்தின் அதிகாரங்களில் மத்தி தலையிடுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.