ட்ரம்பை சுட்ட நபரிடம் இளவரசி கேட்டின் புகைப்படங்கள்: அதிரவைத்த தகவல்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பைக் கொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரைக் குறித்து இணையத்தில் தேடியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த அதிரவைக்கும் தகவல்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பவருமான டொனால்ட் ட்ரம்பை, தாமஸ் க்ரூக்ஸ் என்பவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியது.
தாமஸை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் தெரிவித்த தகவல்களின்போது, தாமஸ், பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரைக் குறித்து இணையத்தில் தேடியதாக தெரிவித்துள்ளனர்.
புதிய தகவல்
அதிகாரிகள் தாமஸ் வீட்டை சோதனையிட்டபோது, அவரது மொபைலில் அவர் ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரைக் குறித்து தேடியது தெரியவந்தது.
அந்த ராஜ குடும்ப உறுப்பினர் பிரித்தானிய இளவரசியும், வருங்கால ராணியுமான கேட் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்க வானொலியான National Public Radio இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தாமஸ், இளவரசி கேட்டின் புகைப்படங்களை தனது மொபைலில் சேமித்துவைத்திருந்திருக்கிறார்.
தாமஸ் ட்ரம்பைக் கொலை செய்ய முயன்றதற்கு அடுத்த நாள், இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் குறித்து எதுவும் தெரியாமலே, இளவரசி கேட் விம்பிள்டன் இறுதிப் போட்டியைக் காண வந்திருந்தார்.
விம்பிள்டன் போட்டி, இளவரசி உடல் நல பாதிப்பு ஏற்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின் கலந்துகொண்ட இரண்டாவது பொது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.