கட்சியில் 2 லட்சம் பேருக்கு பதவி மற்றும் 30 அணிகளை உருவாக்கும் விஜய்
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியில் 2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.
இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.
அதற்குரிய வேலைகளையும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடிகர் விஜய் நடத்தவுள்ளதாக தெரிகிறது.
அதோடு, மாநாட்டை முடித்து விட்டு 234 தொகுதிகளுக்கும் விஜய் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
மேலும், விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று புஸ்ஸி ஆனந்த் கூறியதாகவும் தகவல் வெளியானது.
2 லட்சம் நிர்வாகிகள்
இந்நிலையில், தனது கட்சியில் சேரும் ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்து நிர்வாகிகளை நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி 2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு தமிழக வெற்றி கழகத்தில் மகளிர் அணி, வக்கீல் அணி, இளைஞரணி என 30 அணிகளை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.