;
Athirady Tamil News

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அபிவிருத்தி குழு தெரிவு

0

சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் மேற்கொள்வதாகவும் , அதற்காக 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போதே அபிவிருத்தி குழு நியமிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதனுடைய தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், வைத்தியர் அர்ச்சுனாவை மீண்டும் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட சமூக மட்ட அமைப்பினர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் என வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உட்பட 16 குற்றச்சாட்டுகளை எழுத்துமூலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கினர்.

அந்தவகையில் குறித்த ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் விபரமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு கூறிய அமைச்சர், தான் குறித்த துறைசார்ந்த அமைச்சர் இல்லை என்பதால் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கமான ஒரு பதிலை வழங்குவதாக கூறினார்.

அத்துடன் 15 அங்கத்தவர் உள்ளடங்கிய அபிவிருத்தி குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் நடாத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.