;
Athirady Tamil News

எரிபொருள் விலை மேலும் குறையும்! ஜனாதிபதி ரணிலின் முக்கிய அறிவிப்பு

0

சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது. வலுசக்தி விலைகளுக்கும் இதுவே நடைபெறுகிறது. சந்தை தொடர்பில் இன்னும் பல்வேறு விடயங்கள் உள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இலங்கை நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பினால் (Ceylon Federation of MSME) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘இலங்கையில் உள்ள நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஆற்றலுடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தீர்மானமிக்க முயற்சி’ என்ற வேலைத் திட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.

நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வீழ்ச்சியுடன், சிறு வர்த்தகங்கள் உட்பட அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சி கண்டன. அனைத்து நுண்தொழில்துறைகளும் முற்றிலும் நட்டமடைந்தன. வங்கிக் கட்டமைப்பும் பாதிப்புக்குள்ளானது.

எனவே, அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற பின்னர், ஸ்திரத்தன்மையை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்காக செயற்படுவதே எமது முதல் பொறுப்பாக அமைந்தது.

அச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்திற்கு செல்லுமாறு எமக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும் கேட்டுக்கொண்டன. அப்போது உடன்பாடு ஏற்பட்டு அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தன.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்ளுடன் உடன்படிக்கையை எட்டிய பின்னர் அந்தக் கட்டமைப்புடன் செயற்படலாம் என்று தனியார் கடன் வழங்குநர்களும் எம்மிடம் தெரிவித்தனர்.

நிதி மற்றும் ஆதரவு கிடைக்காமல் எம்மால் எதுவும் செய்ய முடியாது. அந்த நேரத்தில், சில அடிப்படை விடயங்களில் நாம் உடன்பட வேண்டியிருந்தது. அதன்படி, எதிர்காலத்தில் பணத்தை அச்சிடாமலும், வங்கிகளில் கடன் பெறாமலும் இருக்கும் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது.

எரிபொருள் விலை…
வங்கிகளிலும் பல பிரச்சினைகள் இருந்தன. இந்த இரண்டு முறைகளும் எமது முக்கிய வருமானமாக இருந்தன. நாங்கள் பயணித்த இந்த தவறான பாதையை விட்டுவிட்டு புதிய பாதையில் பிரவேசிக்குமாறு அவர்கள் மேலும் தெரிவித்தனர். அதன்படி, நாம் சரியான பாதையில் பிரவேசித்தோம்.

அதன்போது வருமானம் ஈட்டுவதற்காக, சில கூட்டுத்தாபனங்களுக்கு வழங்கும் மானியங்களை நீக்க வேண்டியிருந்தது. ஒரு சில கூட்டுத்தாபனங்களுக்கு வருடத்திற்கு 700 முதல் 800 மில்லியன் ரூபாய் வரை மானியம் வழங்கியுள்ளோம். அந்த மானியங்களை இந்நாட்டு மக்களே செலுத்தினர். எனவே நாங்கள் அதை நிறுத்த வேண்டியிருந்தது.

அச்சந்தர்ப்பத்தில் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லாததால் வட் வரியை அதிகரிக்க வேண்டியதாயிற்று. தற்போது நமது நாட்டுப் பணத்தில் நாட்டின் பொருளாதாரம் இயங்குகிறது. ஒரு சுமை எங்கள் மீது சுமத்தப்பட்டது.

ஆனால் நாங்கள் அதை சுமக்க வேண்டியிருந்தது. நம் சுமைகளை அவர்கள் சுமக்கும் முன் நாம் நம் சுமைகளை சுமக்கும் பொறுப்பை ஏற்க முடியும் என்பதை உலகிற்கு காட்டுமாறு அவர்கள் தெரிவித்தனர். நாம் அங்கிருந்தே ஆரம்பித்தோம்.

இறுதியாக, எங்களுடைய நாட்டுப் பணத்தில் அரச, கூட்டுத்தாபனங்கள் அனைத்தையும் சரியாக நிர்வகிக்க முடிந்தது. எனவே, உலக சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது. வலுசக்தி விலைகளுக்கும் இதுவே நடைபெறுகிறது. சந்தை தொடர்பில் இன்னும் பல்வேறு விடயங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.