காசா முகாம்கள் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்: ஒரே நாளில் 39 பேர் பலி!
பலஸ்தீன (Palastine) நகரமான காசாவின் (Gaza Strip) பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா (Rafah) நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் பத்திரிகையாளர்
இதன்போது, உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரின் குடும்பமும் கொல்லப்பட்டுள்ளதுடன், கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், மக்கள் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு பகுதியின் மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை, அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் முன்னதாக மற்றொரு முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 2 பத்திரிகையாளர் உட்பட பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைதிப் பேச்சுவார்தை
குறிப்பாக, இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38,798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், அமெரிக்காவுடன் (USA) கத்தார் (Qatar), எகிப்து (Egypt) உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் (Israel – Hamas) போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்தைகள் தோல்விமுகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை (Joe Biden) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyagu) இந்த வாரம் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.