பெண்ணின் மண்டை ஓட்டிலிருந்து அகற்றப்பட்ட 77 ஊசிகள் : மருத்துவர்கள் அதிர்ச்சி
பெண் ஒருவரின் மண்டை ஓட்டில் இருந்து 77 ஊசிகள் அகற்றப்பட்டது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா பெஹரா (19) என்ற பெண்ணின் தலையிலிருந்தே இந்த ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன.
இவர் தீராத தலைவலியால் அவதிப்பட்டதால் பீமா பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் தலையை சிடி ஸ்கான் மூலம் ஆராய்ந்ததில் மண்டை ஓட்டின் உள்ளே பல ஊசிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 22 ஊசிகள் வரை இருக்குமென்று கணித்த மருத்துவர்கள் அதில் 8 ஊசிகளை எடுத்துள்ளனர்.
தீராத தலைவலி
ஆனால், அந்தப் பெண்ணுக்கு வலி மேலும் தீவிரமடைந்ததால் அவரை வீர் சுரேந்திர சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வியாழன் (ஜூலை 18) அன்று சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நடத்தப்பட்ட ஸ்கான் மற்றும் பரிசோதனைகளைத் தொடர்ந்து, அவரது மண்டை ஓட்டிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 70 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 20) நரம்பியல் நிபுணர்களால் மீண்டும் நடந்தப்பட்ட அறுவை சிகிச்சையில் மேலும் 7 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன.
77 ஊசிகள் அகற்றம்
இதுகுறித்துப் பேசிய அந்த மருத்துவமனையின் இயக்குநர் பாபாகிரஹி ராத், “இதுவரை 77 ஊசிகளை அந்தப் பெண்ணின் மண்டை ஓட்டிலிருந்து இரு அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றியுள்ளோம். அதிர்ஷ்டவசமாக, ஊசிகள் அவரது மண்டை ஓட்டில் தீவிர காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், தலையில் உள்ள மென் திசுக்களில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் இப்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். மேலும், பரிசோதனைகள் செய்த பிறகு அடுத்தக்கட்ட சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்படும்” என்று கூறினார்.
இதேவேளை சூனியம் செய்வதாகக் கூறி ரேஷ்மாவின் தலையில் ஊசிகளை செலுத்திய நபரான தேஜ்ராஜ் ராணாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.