ஜனாதிபதி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை
தேர்தல் குறித்த அறிவிப்பில் வேட்பு மனு தாக்கல் செய்தல் மற்றும் தேர்தல் நடத்தப்படும் திகதிகள் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் குறித்து அறிவித்து 16 முதல் 21 நாட்களில் வேட்பு மனுக்களை கோரி, அதன் பின்னர் 4 அல்லது 6 வார காலத்திற்குள் தேர்தல் நடாத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி பெற்றுக் கொள்ளல் தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசாங்க அச்சக மா அதிபர் உள்ளிட்டவர்கள் தேர்தலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.