;
Athirady Tamil News

அரசு ஊழியர்கள் இனி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்? மத்திய அரசு அதிரடி உத்தரவு

0

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி உட்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்தவர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளை தான் பாஜக அரசு நடைமுறை படுத்தி வருவதாகவும், ஆட்சி நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலையீடு இருப்பதாகவும் நீண்ட காலமாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

காந்தி சுட்டு கொல்லப்பட்ட பிறகு, எமெர்ஜென்சி காலம், பாபர் மசூதி இடிப்பு ஆகிய காலகட்டங்களில் அரசால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டு பின்னர் அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கம்
1966 ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்க தடை விதித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. 58 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய பிரதமர் மோடியின் கீழ் இயங்கும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அந்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”காந்திஜி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1948 பிப்ரவரியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சர்தார் படேல் தடை செய்தார். இதையடுத்து, நல்ல நடத்தை உறுதியளித்ததன் பேரில் தடை வாபஸ் பெறப்பட்டது. இதற்குப் பிறகும் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் கொடி பறக்கவில்லை. 1966 ஆம் ஆண்டில், ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அது சரியான முடிவு.

ஜூன் 4, 2024க்குப் பிறகு, சுய-அபிஷேகம் செய்யப்பட்ட உயிரியல் பிறப்பற்ற பிரதமருக்கும், ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையிலான உறவுகள் முறிந்துள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட நடைமுறையில் இருந்த 58 ஆண்டுகால தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. அதிகாரத்துவம் இப்போது நிக்கர்களிலும் வரலாம் என்று நான் நினைக்கிறேன்” என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.