;
Athirady Tamil News

மன்னாரில் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு எதிராக மக்களால் போராட்டம் முன்னெடுப்பு

0

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான காணி உரிமை கோரி அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வாழ்வாதார செயற்பாடுகள்
மாந்தை மேற்கு பகுதியில் உள்ள சோழ மண்டலம் குளத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக அரசாங்க அனுமதியுடன் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த அந்தோனியார் புரத்தை சேர்ந்த மக்களுக்கு நபருக்கு தலா 02 ஏக்கர் காணி வீதம் வழங்குவதாகவும் அதன் ஊடாக வாழ்வார செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுவதாகவும் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாக்குறுதியை அடிப்படையாக கொண்டு மக்கள் எந்த ஒரு காணி ஆவணங்களும் இன்றி பல வருடங்களாக அப்பகுதியில் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறித்த காணிகளை அந்தோனியார் புரம் மக்களுக்கு வழங்காது வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளடங்களாக மன்னார் மாவட்டத்தை சேராத வவுனியா மற்றும் கொழும்பு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர்களால் காணிகளை பண்படுத்தும் செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணி தொடர்பான பிணக்குகள்
போராட்டக்காரர்கள் இந்த நாட்டில் ஏழைகளுக்கு நீதியே இல்லையா ? , அரச அதிகாரிகளே காணி மாபியாக்களின் கூட்டாளிகளா? அரச அதிகாரிகளே துரோகத்திற்கு துணை போகாதீர்கள், தமிழ் அரசியல்வாதிகளே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றீர்களா? போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனிடம் போராட்டகாரர்கள் கையளித்த நிலையில், இவ்வாறு காணி தொடர்பான பிணக்குகளை நீண்ட நாட்கள் முடிவுறுத்தாமல் வைத்திருக்க முடியாது எனவும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலருக்கு காணி இல்லாத நிலையில் வேறு மாவட்டத்தையும் வெளிநாட்டையும் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதை ஏற்க முடியாது என அவர் தெரிவித்தார்.

மேலும் இன்றைய தினம் (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு குறித்த காணி விடயம் தொடர்பாக மாவட்ட செயலகம் சார்பாக அறிக்கை ஒன்று சமர்ப்பிக்க உள்ளதாகவும் இன்றைய போராட்டம் தொடர்பான ஆவணங்களையும் அறிக்கையுடன் சமர்பித்து விரைவில் குறித்த பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான ஒரு முடிவை பெற்றுத் தருவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.