லட்சக்கணக்கில் செலவு செய்து பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்தவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்
ஏஜண்டுகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்த இந்தோனேசியா நாட்டுப் பணியாளர்கள் சிலரை, சில வாரங்களில் வேலையை விட்டு அனுப்பியுள்ளது நிறுவனம் ஒன்று.
லட்சக்கணக்கில் செலவு செய்து வேலைக்கு வந்த பணியாளர்கள்
இந்தோனேசியாவிலிருந்து லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பிரித்தானியாவில் பழங்கள் பறிக்கும் வேலைக்கு வந்துள்ளார்கள் இந்தோனேசிய நாட்டவர்கள் சிலர்.
ஆனால், அவர்கள் வேகமாக பழங்களை பறிக்கவில்லை என்று கூறி, Haygrove என்னும் நிறுவனம் சில வாரங்களில் அவர்களை வேலையை விட்டு அனுப்பியுள்ளது.
அவர்களில் ஒருவர், தனது நிலம், தனது மற்றும் தனது பெற்றோரின் மோட்டார் சைக்கிள்களை விற்று சுமார் 2,000 பவுண்டுகள், அதாவது, இலங்கை மதிப்பில் 7,84,792 ரூபாய் செலவிட்டு பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்திருக்கிறார்.
அவரைப்போலவே பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ஒரு மணி நேரத்தில் 20 கிலோ பழங்கள் பறிக்கவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
மற்றொருவரோ, நாளுக்கு நாள் பழுக்கும் பழங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதால், தங்களுக்கு வேலை வழங்குவோரின் எதிர்பார்ப்பை தங்களால் நிறைவேற்றமுடியவில்லை என்கிறார்.
இப்படி வேலைக்கு வருவோர் பலர் வேலையிலிருந்து அனுப்பப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், புதிதாக புலம்பெயர்தல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சீமா மல்ஹோத்ரா, இந்த விடயம் குறித்து விசாரிக்க இருப்பதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.