குரோஷியாவில் தனது தாயை கொலை செய்த போர் வீரர்
குரோஷியாவின் நகரம் ஒன்றில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் பிரவேசித்த துப்பாக்கிதாரி ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவரின் தாயார் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, தாக்குதலுக்கு இலக்கானவர்களில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றொருவர் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்தில் குறைந்தது ஆறு பேர் வரை காயமடைந்துள்ளதுடன் அதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் 80 மற்றும் 90 வயதுக்குட்பட்டவர்கள் என்று குரோசியாவின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் 1973ஆம் ஆண்டில் பிறந்தவர் என்றும் 1991-95 குரோசியாவில் நடந்த போரில் பங்கேற்ற படை வீரர் என்றும் குரோஷியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட சந்தேகநபரின் தாய், கடந்த 10 வருடங்களாக முதியோர் இல்லத்தில் வசித்து வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.