;
Athirady Tamil News

காசாவில் 39,000 தாண்டியது உயிரிழப்பு: புதிய போர் முயற்சியில் இஸ்ரேல்

0

காசாவில் (Gaza) கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் (Israel) இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் (Palestine) எண்ணிக்கை 39,000ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு நகரான கான் யூனிஸில் (Khan Yunis) நேற்று (23) இடம்பெற்ற சரமாரித் தாக்குதல்களில் 27 பேர் கொல்லப்பட்ட நிலையிலேயே இந்த பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில், புதிய போர் நடவடிக்கைகளை முன்னேடுக்கும் வகையில் காசாவின் சில பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு
கான் யூனிஸின் கிழக்காக உள்ள பனீ சுஹைலா சிறு நகரில் இஸ்ரேலிய பீரங்கிகள் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் குறைந்தது 16 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் ஆறு சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பலஸ்தீன போராளிகளின் புதிய தாக்குதல்களை அடுத்து பலஸ்தீனர்களை வெளியேறும்படி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு
இந்த வெளியேற்ற உத்தரவினால் 400,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கட்டார் (Qatar) மற்றும் எகிப்தின் (Egypt) மத்தியஸ்தத்துடன் இடம்பெறும் போர் நிறுத்த முயற்சிகளும் போர் தரப்புகள் இடையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஸ்தம்பித்துள்ளது.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவை வியாழக்கிழமை அனுப்புவதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஞாயிற்றுக்கிழமை (21) உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலகம் கூறியபோதும் அந்தத் குழு எங்கே அனுப்பப்படுகிறது என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் உரையாற்றுவதற்காக நெதன்யாகு நேற்று முன்தினம் (22) வொஷிங்டன் (Washington) புறப்பட்டுச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.