ட்ரம்ப் மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறேன்… போட்டுத் தாக்கிய கமலா ஹாரிஸ்
விஸ்கான்சின் மாகாணத்தில் தமது முதல் பரப்புரையை துவங்கிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ட்ரம்ப் மாதிரியான ஆட்களை தாம் முன்னரே பார்த்திருக்கிறேன் என கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
கடும் போட்டி நிலவும் விஸ்கான்சின்
ஜனநாயக கட்சிக்கு கண்டிப்பாக வெற்றியை உறுதி செய்ய வேண்டிய மாகாணங்களில் ஒன்றான விஸ்கான்சினில் தமது முதல் பரப்புரையை துவங்கியுள்ளார் கமலா ஹாரிஸ்.
ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், ஜனாதிபதி வேட்பாளராக தமது தெரிவு கமலா ஹாரிஸ் எனவும் அவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை அடுத்து, முதல் 24 மணி நேரத்தில் சுமார் 81 மில்லியன் டொலர் தேர்தல் நிதி திரட்டி வரலாறு படைத்துள்ளார் கமலா ஹாரிஸ்.
இதுவரை ஜனநாயக கட்சி சார்பில் ட்ரம்புக்கு எதிரான வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்படவில்லை என்றாலும், மக்களிடையே தமது செல்வாக்கை அதிகரித்து கட்சியின் வேட்பாளர் அந்தஸ்தை தட்டிச்செல்லும் நோக்கில் கமலா ஹாரிஸ் செயல்படத் தொடங்கியுள்ளார்.
இந்த திட்டத்தின் ஒருபகுதியாக, கடும் போட்டி நிலவும் விஸ்கான்சின் மாகாணத்திலேயே தமது முதல் பரப்புரை முன்னெடுத்துள்ளார். திரளான மக்கள் கூட்டம் நடுவே உற்சாகத்துடன் பேசிய கமலா ஹாரிஸ்,
துணை ஜனாதிபதியாக தாம் தெரிவாகும் முன்னர், ஒரு செனட்டராக தெரிவாகும் முன்னர், கலிபோர்னியா மாகாணத்தின் தலைமை சட்ட ஆலோசகராக தெரிவாகும் முன்னர், தாம் வெறும் ஒரு சாதாரண சட்டத்தரணியாக பணியாற்றியதாக குறிப்பிட்ட அவர்,
ட்ரம்ப் மாதிரியான ஆட்களையும்
நீதிமன்றத்தில் எல்லா வகையான குற்றவாளிகளையும் தாம் எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். பெண்களை துஷ்பிரயோகம் செய்ய வேட்டையாடுபவர்கள், நுகர்வோரை கொள்ளையடிக்கும் மோசடியாளர்கள்,
தங்கள் சொந்த லாபத்திற்காக விதிகளை மீறுபவர்கள் என பல தரப்பினரை தாம் சந்தித்துள்ளதாக குறிப்பிட்டு, டொனால்டு ட்ரம்ப் மாதிரியான ஆட்களையும் தாம் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்க, அந்த அரங்கம் கரவொலியால் அதிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தொடர்ந்த அவர், இந்த பிரச்சாரத்தில், நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், வாரத்தின் எந்த நாளிலும் ட்ரம்புக்கு எதிராக எனது சாதனைகளை பெருமையுடன் பட்டியலிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கலிபோர்னியாவின் தலைமை சட்ட ஆலோசகராக பொறுப்பில் இருந்தபோது பெரிய வோல் ஸ்ட்ரீட் வங்கிகளை எதிர்கொண்டு மோசடிக்கு அவர்களைப் பொறுப்பேற்க வைத்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் டொனால்டு ட்ரம்ப் மோசடி வழக்கில் சிக்கி 34 பிரிவுகளில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டவர். நாம் முன்னெடுக்கும் பரப்புரையானது டொனால்டு ட்ரம்புக்கு எதிரானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள கமலா ஹாரிஸ்,
நாம் யாருக்காக போராட வேண்டுமோ அவர்களுக்கானது என்றார். இதனிடையே, ஜனநாயக கட்சியின் மிக முக்கிய தலைவர்கள் Chuck Schumer மற்றும் Hakeem Jeffries ஆகியோர் தங்கள் ஆதரவை கமலா ஹாரிஸுக்கு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.