தொண்டைமானாறு வீதியை புனரமைக்க கோரிக்கை
யாழ்ப்பாணம் , அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி மிக மோசமான நிலையில் பழுதடைந்துள்ளமையால் , வீதியால் பயணிப்போர்கள் மிக சிரமங்களின் மத்தியிலையே பயணிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் பருவமழை காலத்தில் தொண்டைமானாறு நீர் குறித்த வீதியின் மேலாக பாய்ந்து ஓடுவதால் , வீதி மழை காலங்களில் வீதிகளில் பாரிய குழிகள் தோன்றி வீதியால் பயணிக்க முடியாத அளவுக்கு வீதி மோசமாக சேதமடைந்து இருக்கும்.
பின்னர் மழை காலம் முடிய தொண்டைமனாற்றில், நீர் குறைய வீதியில் உள்ள குழிகளை மூடி வீதியை தாற்காலிகமாக புனரமைத்து மக்கள் தமது போக்குவரத்தினை தொடருவார்கள்.
இம்முறை வீதி பருவமழை காலம் முடிவடைந்து சுமார் 07 மாதங்கள் கடந்த நிலையிலும் பழுதடைந்த வீதியினை தற்காலிகமாக வேணும் புனரமைக்கப்படாது இருப்பதால் , வீதியால் செல்வோர் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர்
எதிர்வரும் 04ஆம் திகதி செல்வச்சந்நிதி ஆலய வருடாந்திர திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த வீதியினை அதிகளவானோர், வாகனங்களில் பயணிப்பார்கள் என்பதால் , வீதியினை விரைந்து புனரமைத்து தருமாறு கோரியுள்ளனர்.
தொண்டைமானாறு நீர் வீதியின் மேலாக ஓடாதவாறு குறித்த வீதியானது உயர்த்தப்பட்டு , பொருத்தமான இடங்களில் சிறிய பாலங்கள் அமைத்து வீதியினை நிரந்தமாக தரமான வீதியாக புனரமைத்து தருமாறு பல வருடங்களாக அப்பகுதி மக்கள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.