;
Athirady Tamil News

திருஞானசம்பந்தர் வித்தியால அதிபரை மாற்ற கோரி வீதிக்கு இறங்கிய பெற்றோர்கள்!

0

வவுனியா ஶ்ரீ இராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அதிபரை மாற்றுமாறு கோரி பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (24) பாடசாலையின் காலை பிரார்த்தனை முடிவடைந்த பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர்கள் கூறுகையில்,

பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு
எமது பாடசாலை கல்விநிலையில் வீழ்ச்சி நிலையினை கண்டுள்ளது. பாடசாலையில் நடைபெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கணக்கறிக்கைகள் எவையும் சமர்பிக்கப்படவில்லை.

அதோடு பாடசாலை சம்பவங்கள் தொடர்பாக பெற்றோர்களிற்கு அறிவித்து கலந்துரையாடும் நடவடிக்கையினையும் அவர் முன்னெடுப்பதில்லை. இதன் காரணமாக பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இந்தநிலைமை தொடர்ந்தால் பாடசாலையினை இழுத்து மூடவேண்டிய நிலைமையே ஏற்படும் என தெரிவித்த அவர்கள், எனவே உடனடியாக அவரை மாற்றித்தருமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.

மறுப்பு தெரிவிக்கும் அதிபர்….

இது தொடர்பாக பாடசாலையின் அதிபர் கூறுகையில்,

நான் பொறுப்பேற்ற பின்னர் பாடசாலையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். குறிப்பாக வெளிநபர்களின் உதவிகளை பெற்று மாணவர்களது கல்விவளர்ச்சிக்கு உரிய தேவைகளை செய்துள்ளதுடன் , வறுமைப்பட்ட மாணவர்களின் தேவைகருதி சத்துணவு திட்டத்தினை விஸ்தரித்துள்ளோம் என்றார்.

அதுமட்டுமல்லாது அனைத்திற்கும் கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் பாடசாலையின் நிர்வாகத்தை ஒரு சிலநபர்கள் சொல்வது போல நடாத்தமுடியாது.

சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் சரியாக செயற்பட்டால் நாம் பாடசாலையில் மாணவர்களுடன் முரண்பட வேண்டிய தேவை ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.