திருச்சியில் நடக்கும் விஜயின் அரசியல் மாநாடு.., 10 லட்சம் பேருக்கு உணவு சமைக்க இப்போதே ஓர்டர்
தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.
இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளார். அதற்குரிய வேலைகளையும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
அரசியல் மாநாடு
அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடிகர் விஜய் நடத்தவுள்ளதாக தெரிகிறது.
அதோடு, மாநாட்டை முடித்து விட்டு 234 தொகுதிகளுக்கும் விஜய் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
இதில், தவெக மாநாட்டை பொறுத்தவரை முதலில் மதுரையில் நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது இந்த மாநாட்டை திருச்சியில் நடத்த விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது திருச்சியில் உள்ள சிறுகனூர் என்ற பகுதியை மாநாட்டை நடத்த தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் இருந்தும் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.
இதனால், மாநாட்டில் பங்கேற்கும் 10 லட்சம் பேருக்கு உணவு சமைப்பதற்கான ஓர்டரும் இப்போதே கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமாக நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படம் வெளியான பிறகு மாநாடு நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.