“காவிரியில் 45 டிஎம்சி தண்ணீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்” – தமிழ்நாடு கோரிக்கை!
காவிரியில் ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை உரிய நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தரப்பில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, மழையால் நீர்வரத்து இருப்பதால், தமிழ்நாட்டிற்கு அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாத பங்கீடான 45 டிஎம்சி தண்ணீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஆகஸ்ட் மாத தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்ய வரும் 30-ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெறும் என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கான தண்ணீர் திறப்பை கர்நாடகா உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.