தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார்.
கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார்.
விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் உரிமை
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
1977ம் ஆண்டில் விக்ரமபாகு கருணாரட்ன நவ சமசமாஜ கட்சியில் இணைந்து கொண்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமான தொடர்புகளை பேணியிருந்தார்.
இலங்கை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, கேம்றிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார்.
அவர், 18 ஆண்டுகளாக பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினால் அவர் தனது தொழிலை இழக்க நேரிட்டது.
இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.