புணேவில் கனமழைக்கு 4 பேர் பலி! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
மகாராஷ்டிரத்தின் புணேவில் இடைவிடாது பெய்யும் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக வடமாநிலத்தில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், புணேவில் பெய்துவரும் கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புணே மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், புணே நகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளான வெல்ஹா, முல்ஷி, போர் தாலுகாக்கள் மற்றும் கடக்வாஸ்லா உள்ளிட்ட பல அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் புதன்கிழமை இரவு முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
நகரத்தில், தாழ்வான பகுதிகளான சிங்ககாட் சாலை, பவ்தான், பேனர் மற்றும் டெக்கான் ஜிம்கானா போன்ற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. புணே தீயணைப்புப் படை மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவால் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
புணே மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் கூறியதாவது:
கடக்வாஸ்லா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் கனமழையை அடுத்து நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடக்வாஸ்லா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 35 ஆயிரம் கன அடியிலிருந்து 45 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்துள்ளது. எனவே, தண்ணீர் வெளியேற்றம் காரணமாக முத்தா ஆற்றின் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
புணேவில் மழை தொடர்பான சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரின் டெக்கான் பகுதியில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி இறந்தனர், தஹ்மினி காட் பிரிவில் நிலச்சரிவில் ஒருவர் இறந்தார் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, இதற்கிடையே புணே மாவட்டத்திற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ஐம்டி சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.