தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் : சுமந்திரன் வெளியிட்ட தகவல்
தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரரை நிறுத்துகின்ற எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இதுவரையில் எடுக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ( M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதான வேட்பாளர்கள்
மேலும் தெரிவிக்கையில், “தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் நாங்கள் எடுத்த தீர்மானம் என்னவென்றால், ஜனாதிபதித் தேர்தலிலே நிற்கின்ற பிரதான வேட்பாளர்களோடு நாங்கள் பேரம் பேசி, அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலே அவர்கள் சொல்லுகின்ற விடயங்களை அவதானித்து, யாருக்கு எங்கள் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கின்ற செய்தியை அதற்குப் பின்னர் நாங்கள் அறிவிப்போம் என்று சொல்லியிருக்கின்றோம்.
அதன்படி பிரதான வேட்பாளர்களில் தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டியிருக்கின்ற சஜித் பிரேமதாசவோடும் மற்றது அநுரகுமார திஸாநாயக்கவோடும் எங்கள் கட்சி அலுவலகத்திலே உத்தியோகபூர்வமாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம்.
தேர்தல் அறிக்கை
அத்தோடு எங்களுடைய எதிர்பார்ப்புக்களை அவர்களுக்கு நாங்கள் சொல்லியிருக்கின்றோம்.
அவர்களுடைய தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னர் என்னென்ன விடயங்கள் அதிலே உள்ளடக்கப்பட்டு இருக்கின்றன, எவற்றையெல்லாம் பகிரங்கப்படுத்தி சொல்லுகின்றார்கள் என்பதை அவதானிப்போம்.
ஆனால், வேறு எவரும் இதுவரையில் தங்களை வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. அவ்வாறு அறிவிக்கின்ற பட்சத்தில் அவர்களோடும் இதே மாதிரியான பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்துவோம்.” என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.