இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: ஜனாதிபதி ரணில் உறுதி
இலங்கை இளைஞர்களுக்கு உள்நாட்டிலேயே தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) உறுதியளித்துள்ளார்.
கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் 106ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கடந்த 04 வருடங்களாக கல்விக்கான செலவீனங்களை மட்டுப்படுத்தியிருந்தோம். எனவே, இப்போது கல்விக்காக பணம் செலவழித்து புதிய தொழில்நுட்பத்துடன் பாடசாலைக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்த எதிர்பார்க்கிறோம்.
அனுமதிப் பத்திரங்கள்
கண்காட்சியில் கல்லூரி மாணவர்கள் குழு தயாரித்த ட்ரோன் உபகரணங்களைப் பார்த்தோம். மேலும், பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு குழுக்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்படுகிறது. மேலும், பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கல்வித் துறையில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு உதவவும் முன்வருமாறு எலோன் மஸ்கிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இம்மாத இறுதிக்குள் அவருக்கு இலங்கையில் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனுமதிப் பத்திரங்களை வழங்க எதிர்பார்க்கிறோம்.
மேலும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் இளைஞர் யுவதிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். எம்மால் 04 வருடங்களாக தொழில்வாய்ப்புகள் வழங்க முடியவில்லை. எதிர்காலத்தில் இவர்களின் தொகை மேலும் அதிகரிக்கும். அதற்கு தீர்வு காண வேண்டும்.
புதிய முதலீடுகள்
இப்பிரச்சினைகள் அதிகரித்தால் நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கலாம் .எனவே, தொழில் மற்றும் வருமான வழிகளை உருவாக்க நாட்டில் பெரிய பொருளாதார மாற்றம் செய்யப்பட வேண்டும்.
1977ஆம் ஆண்டு இதேபோன்றதொரு சூழலை நாங்கள் எதிர்கொண்டோம். கம்பஹா மாவட்டத்தில் அப்போது தொழிற்சாலைகள் இருக்கவில்லை. கட்டுநாயக்க மற்றும் பியகம வர்த்தக வலயங்களை ஆரம்பித்தோம்.
சந்திரிகா குமாரதுங்க அத்தனகல்ல பிரதேசத்தில் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார். இப்போது கம்பஹா மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் உள்ளன.
அத்துடன் அடுத்த வருடம் கேரகல பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திருகோணமலைக்கு மாற்றப்படும் போது சபுகஸ்கந்த பிரதேசத்தில் ஒரு பெரிய தொழில் பேட்டையொன்றை உருவாக்க முடியும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க புதிய முதலீடுகளைப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.