மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக மக்களை அச்சுறுத்திய வன்முறை கும்பல்
மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போது , மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த வன்முறை கும்பல் மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
மானிப்பாய் கட்டுடை பகுதியில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை ஹயஸ் ரக வாகனம் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துடன் , அப்பெண்ணின் மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய ஹயஸ் வாகன சாரதி தப்பியோடிய நிலையில் , வாகனத்தில் இருந்த இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
வாகனத்தில் வந்த சாரதி உள்ளிட்ட நால்வரும் நிறை போதையில் காணப்பட்டதாகவும் , சாரதி போதையில் வாகனம் செலுத்தியே விபத்தினை ஏற்படுத்தினார். அதனால் அவரை விரைந்து கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக இரவு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் மக்களை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டனர்.
அதன்போது மக்கள் மத்தியில் இருந்த சில இளைஞர்கள் வன்முறை கும்பலை மடக்கி பிடிக்க முயன்ற போது அவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியவர்களை இளைஞர்கள் துரத்திய வேளை ஒருவருடைய மோட்டார் சைக்கிள் பழுதடைந்து வீதியில் நின்ற நிலையில் மோட்டார் சைக்கிளுடன் அந்நபரை இளைஞர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். ஏனைய ஐவரும் தப்பியோடியுள்ளனர்.
பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த வன்முறை கும்பல் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள கடையொன்றின் மீது தாக்குதல் நடத்தி விட்டு, சங்கானை பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தி விட்டே , மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்த வந்திருந்தமை தெரிய வந்துள்ளது.
குறித்த வன்முறை கும்பலுக்கும் , விபத்தினை ஏற்படுத்திய கும்பலுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாம். பொலிஸ் நிலையம் முன்பாகவே தைரியமாக வாள்களுடன் நடமாடி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். எனவே தப்பியோடிய ஐவரையும் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.