சவேந்திர சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு
தேர்தல் ஆணையாளர் அறிவித்தபடி ஜனாதிபதி வேட்பாளர்கள், பிரஜைகள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை அதிகபட்சமாக உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்பு பிரதானிகளுக்கு குறித்த பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு இன்று (26) காலை நாடாளுமன்றத்தில் கூடிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
சவேந்திர சில்வா
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் தலைவர்கள் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் குழு இந்தக் குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டது.
அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கடந்த இரண்டு வருடங்களில் மிகவும் சிக்கலான காலப்பகுதியில் அமைச்சு என்ற ரீதியில் நாம் தீவிரமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்ததாகவும், அந்த காலப்பகுதியில் தேசிய பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் மீண்டும் உறுதிப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எனவே, தம்மை அர்ப்பணித்த அனைத்து தரப்பினருக்கும் கௌரவ ஜனாதிபதியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்ட பிரமித்த பண்டார தென்னக்கோன், பாதுகாப்பு அமைச்சும் அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் தமது பணிகளை முறையாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், எதிர்காலத்திலும், ஆயுதப்படைகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலான விடயங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் இந்த குழு கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.