வெறும் உப்பு தான்… 200 ரூபாயில் சிறுவன் தொடங்கிய தொழில்: இன்று சந்தை மதிப்பு ரூ 10 கோடி
மதுரையை சேர்ந்த பாடசாலை மாணவன், பெற்றோர் அளித்த 200 ரூபாயில் தொடங்கிய தொழில் இன்று ரூ 10 கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது.
எவரும் மதிப்பளிக்கவில்லை
மதுரையை சேர்ந்த 22 வயது சூர்ய வர்ஷன் என்பவரது Naked Nature என்ற நிறுவனம் உருவான கதை பலருக்கும் ஊக்கமளிப்பதாகும். 12ம் வகுப்பு படிக்கும் போது தங்களின் வீட்டு சமையலறையில் மிக எளிமையான முறையில் உருவாக்கியது தான் செம்பருத்தி குளியல் உப்பு.
அதுவும் அவரது பெற்றோர் அளித்த பணத்தில் சேமித்த 200 ரூபாயில் தொடங்கியுள்ளார் சூர்ய வர்ஷன். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் என்பதால், அங்கிருந்து தனது தயாரிப்புக்கு தேவையான உப்பை வரவழைத்துள்ளார்.
ஆனால் தொடக்கத்தில் சூர்யாவின் தயாரிப்புக்கு எவரும் மதிப்பளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அவரது வயதை குறிப்பிட்டு, விளையாட்டுப் பொருள் என்றே நிராகரித்துள்ளனர்.
ஆனால் ஆயுர்வேத மருத்துவர் ஒருவர், சூர்யா தயாரித்துள்ள பொருளில் ஈர்க்கப்பட்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு வாங்கவே, அதுவே இதுவரையான அவரது வளர்ச்சிக்கு முதற்படியாக அமைந்துள்ளது.
நம்பி களமிறங்கிய சூர்யா
எதிர்பாராத இந்த திருப்புமுனை சூர்யாவின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. இதனையடுத்து மதுரையில் ஒரு கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்தார். அத்துடன், தமது தொழிலுக்கு முதலீடு திரட்டும் பொருட்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த ஒன்லைன் வகுப்புகள் மூலம் சுமார் ரூ 2.20 லட்சம் சம்பாதித்தார்.
தாம் சம்பாதித்ததை அப்படியே தமது கனவு நிறுவனமான Naked Nature-ல் முதலீடு செய்தார். தற்போது Naked Nature நிறுவனம் பல வகையில் 70 தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
2021 மற்றும் 2022ல் மட்டும் Naked Nature நிறுவனம் ரூ 56 லட்சம் அளவுக்கு விற்பனை முன்னெடுத்துள்ளது. மதுரையை சேர்ந்த இந்த நிறுவனம் தற்போது இணையமூடாக தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலும் பிரபலமடைந்து வருகிறது.
வெறும் 200 ரூபாய் முதலீட்டில், உப்பை நம்பி களமிறங்கிய சூர்யா, இன்று ரூ 10 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக வளர்த்துள்ளார்.