இஸ்ரேல் – பலஸ்தீனம் போர் நிறுத்தம் : நெதன்யாகுவிடம் கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்
இஸ்ரேலுக்கும் (Israel) பலஸ்தீனத்திற்கும் (Palestine) இடையே தற்போது நடைபெற்றுவரும் போர்நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் (Benjamin Netanyahu) அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) வலியுறுத்தினார்.
இஸ்ரேல் பிரதமா், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) உடனான சந்திப்புக்கு பின்னர் வெள்ளை மாளிகையில் நேற்று முன் தினம் (25) கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது ஹமாஸ் அமைப்பினருடனான போர்நிறுத்த உடன்படிக்கைக்கு வருமாறு பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார்.
ஹாரிஸ் வெளியிட்டுள்ள பதிவு
இதனால் ஹமாஸ் அமைப்பால் காசாவில் உள்ள பிணைக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளோர் தாயகம் திரும்ப முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக ஹாரிஸ் தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், நெதன்யாகுவுடன் வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாக உரையாடியதாகவும், அதில் அவர் இஸ்ரேலின் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒன்பது மாதப் போரில் காசாவில் அதிக இறப்பு எண்ணிக்கை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார் எனவும் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
அப்போது, காசா மீதான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவும், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவரவும், பிணைக் கைதிகளை வீட்டிற்கு அழைத்து வந்து போரை முடிவுக்குக் கொண்டுவருமாறும் நெதன்யாகுவிடம் பைடன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய நெதன்யாகு
இதேவேளை அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு, “ஹமாஸ் அமைப்பினருடனான போரில் ‘முழுமையான வெற்றி’ கிடைக்கும் வரை அந்தப் போரை தொடா்ந்து நடத்துவோம்.
இருந்தாலும், இஸ்ரேலின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பரிசீலிப்போம். இஸ்ரேலுக்கும் பலஸ்தீன அமைப்புகளுக்கும் இடையே தற்போது நடைபெற்றுவரும் போா் நாகரிகத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இடையிலானது.
இந்தப் போரில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோா் ஈரானால் பயன்படுத்திக்கொள்ளப்படும் கைப்பாவைகள். காசா போா் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அதிபா் ஜோ பைடன் செயற்படுவது பாராட்டுக்குரியது“ என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.