மான்செஸ்டர் விமான நிலைய விவகாரம்… பொலிசார் மீது குற்றவியல் நடவடிக்கை
ன்செஸ்டர் விமான நிலையத்தில் பயணி ஒருவரை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்புடைய பொலிசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவாகியுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை
செவ்வாயன்று 19 வயதான முகமது ஃபாஹிரை கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கியுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், சமூக மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பொலிசார் மீது துறை ரீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் என்ற தகவலும் வெளியானது. தற்போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தொடர்புடைய பொலிஸ் அதிகாரியுடன் நேரிடையான விசாரணைக்கும் அதிகாரிகள் தரப்பு தயாராகியுள்ளது. அத்துடன் சமூக தலைவர்களை சந்தித்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவும் முடிவாகியுள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரி தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது ஃபாஹிர் மற்றும் அவரது சகோதரர் அமத் ஆகியோர் தங்கள் தாயாருக்கு ஆதரவாக கேள்வி எழுப்பியபோது அங்கே கூச்சல் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தாயார் மீது மோதியதாக
பயணி ஒருவர் லக்கேஜ் டிராலியை ஃபாஹிர் தாயார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குறித்த பயணியுடன் ஃபாஹிரின் தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மட்டுமின்றி, நடந்தவற்றை தமது பிள்ளைகளிடமும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்தே அந்த நபரிடம் ஃபாஹிர் மற்றும் அவரது சகோதரர் அமத் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதன் பின்னரே இந்த விவகாரத்தில் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை ஈடுபட்டுள்ளது.