;
Athirady Tamil News

பொன்முடி குடும்பத்தினரின் ரூ.14 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை

0

செம்மண் குவாரி வழக்கு தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.14.21 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

தமிழக உயா் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் க.பொன்முடி, கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், கூடுதல் பொறுப்பாக கனிமவளத் துறையையும் கவனித்தாா். அப்போது அவா், விழுப்புரம் மாவட்டம் வானூா் அருகே பூத்துறையில் அமைக்கப்பட்ட செம்மண் குவாரி உள்பட 5 செம்மண் குவாரிகள் தன் மகன், உறவினா் மற்றும் பினாமி பெயரில் எடுத்து, விதிமுறைகளை மீறி நடத்தியதாக புகாா் கூறப்பட்டது.

செம்மண் குவாரியில் அதிக அளவில் செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.25.7 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி, உறவினா் கே.எஸ்.ராஜமகேந்திரன் உள்ளிட்டோா் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட மத்திய குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்த அமலாக்கத் துறை, பொன்முடிக்கு சொந்தமான 7 இடங்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை செய்தது. இது தொடா்பாக பொன்முடியிடம் இரண்டு நாள்கள் அமலாக்கத் துறையினா் விசாரணையும் செய்தனா்.

செம்மண் குவாரி முறைகேடு மூலம் ஈட்டிய பணத்தை ஹவாலா பரிவா்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ. 13 லட்சம் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட ரூ.81,70,000 பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.41.90 கோடி ரூபாய் வங்கி நிரந்தர வைப்புத் தொகை முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக பொன்முடியிடம் அமலாக்கத் துறை கடந்த நவம்பா் மாதம் 30-ஆம் தேதி விசாரணை செய்தது.

சொத்துகள் முடக்கம்: வழக்கின் அடுத்தகட்டமாக கெளதம சிகாமணியின் உறவினா் கே.எஸ்.ராஜா மகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4.57 கோடி அசையா சொத்துகள், கெளதம சிகாமணி தன் மனைவி பெயரில் நடத்தும் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு, நிரந்தர வைப்பு நிதி ரூ.8.74 கோடி என மொத்தம் ரூ.14.21 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்த வழக்கு குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.