யாழ்.வீதியில் கண்டெடுத்த தொலைபேசியை விற்றவரும் ,வாங்கியவரும் கைது
வீதியில் கண்டெடுத்த கைத்தொலைபேசியை 76ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபரையும் , அதனை வாங்கியவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது பெறுமதியான கைத்தொலைபேசியை கடந்த 14ஆம் திகதி தவறவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் , தனது கைத்தொலைபேசி தவறவிடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது , தொலைபேசி தவறவிடப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த போது , வீதியில் காணப்பட்ட கைத்தொலைபேசியை இளைஞன் ஒருவர் எடுத்து செல்வது பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் இளைஞனை அடையாளம் கண்டு அவரை கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்த வேளை , இளைஞன் , கைத்தொலைபேசியை முழங்காவில் பகுதியை சேர்ந்த இளைஞனுக்கு 76 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து தொலைபேசியை வாங்கிய இளைஞனை பொலிஸார் கைது செய்து , தொலைபேசியையும் கைப்பற்றி இருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்