காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல் : குழந்தைகள் உட்பட 30 பேர் பலி
காசாவில் (Gaza) டெயிர் அல்-பாலா (Deir el-Balah) பகுதியில் அமைந்துள்ள மருந்துவமனை மீது இஸ்ரேல் (Israel) படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று (27) நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கான் யூனிஸ் (Khan Younis) நகர் அருகேயுள்ள அபாசன் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீதான இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
48 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
பானி சுஹைலா நகரில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்துடன் போரினால் இடம்பெயர்ந்து மத்திய கான் யூனிஸ் பகுதியில் தங்கியுள்ள பலஸ்தீன (Palestine) மக்களின் கூடாரங்களில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காசாவில் நேற்று (27) இஸ்ரேல் படைகள் நிகழ்த்திய தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.