பாரிஸ் ஒலிம்பிக்கில் தவறாக அறிமுகப்படுத்தப்பட்ட தென் கொரியா: மன்னிப்பு கோரிய ஒலிம்பிக் கமிட்டி
பிரான்ஸில் தொடங்கியுள்ள ஒலிம்பிக்கில் தென்கொரிய அணி தவறுதலாக வட கொரியா என்று அழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தென் கொரிய அணிக்கு அதிர்ச்சி
பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் தென் கொரியா தவறுதலாக வட கொரியாவாக அறிமுகப்படுத்தப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
பிரெஞ்சு மொழி அறிவிப்பாளரின் இந்த தவறு காரணமாக தென்கொரிய அணியின் அறிமுகத்தில் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தென் கொரிய அணி அறிமுகத்திற்காக படகில் வந்து கொண்டிருந்த போது, அறிவிப்பாளர் பிரெஞ்சு மொழி மற்றும் ஆங்கிலத்தில் “Democratic People’s Republic of Korea” என வட கொரியாவின் அதிகாரப்பூர்வ பெயரில் அறிமுகப்படுத்தினார்.
இருநாடுகளும் இடையிலான பனிப்போர் மோதல் இன்னும் நடைபெற்று வருவதால் இந்த அறிவிப்பு குழப்பம் மிகவும் உணர்ச்சிவசப்படுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
மன்னிப்பு கோரிய ஒலிம்பிக் கமிட்டி
தென் கொரியாவின் விளையாட்டு அமைச்சகம் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஒப்புக் கொண்டு இருப்பதோடு வருத்தமும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ X தளத்தில், கொரிய மொழியில் மன்னிப்பு கோரியுள்ளது.
அதில், அறிமுக விழாவில் தென் கொரிய அணியின் பிரதிநிதிகளை அழைப்பதில் ஏற்பட்ட தவறுக்கு ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.