;
Athirady Tamil News

இஸ்ரேல் ஜ்தல் ஷம்ஸ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்12 இளைஞர்கள் பலி

0

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் ஹைட்ஸ் பகுதியின் மஜ்தல் ஷம்ஸ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பகுதியின் காற்பந்து மைதானம் ஒன்றின் மீது வான்வழியாக தாக்குதல் நடாத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.

கடந்த வருடம் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் பின்னர் நடத்தப்பட்ட ஒரு ஆபத்தான தாக்குதலாக இது கருதப்படுகின்றது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லாஹ் அமைப்பினரே காரணம் எனக் கூறினாலும் ஹிஸ்புல்லாஹ்வின் பேச்சாளர் மொஹமட் அஃபிப் (Mohamad Afif) இதை மறுத்துள்ளார்.

இந்த தாக்குதலின் பாதிப்புகள் வெளிவருவதற்கு முன்னரே ஹிஸ்புல்லாஹ் அமைப்பு நான்கு வெவ்வேறு தாக்குதல்களுக்கு பொறுப்பெடுத்துக் கொண்டது. அதில் ஒன்று ஹெர்மன் படையின் இராணுவ தலைமையகம் மீதான தாக்குதல் ஆகும்.

இந்த தாக்குதல்கள் லெபனான் மீது இஸ்ரேல் நடாத்திய தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இந்த தாக்குதலில் லெபனானில் 4 படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதேவேளை, அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து விட்டு இஸ்ரேலுக்கு திரும்பிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு குறித்த தாக்குதல் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேலில் உள்ள ட்ரூஸ் சமூகத்தின் தலைவரிடம் நெதன்யாகு தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இதற்கு தகுந்த விலையை கொடுக்கும் என அவர் கூறியுள்ளார்.

கோலன் ஹைட்ஸில் உள்ள நான்கு கிராமங்களில் மஜ்தல் ஷம்ஸ் கிராமமும் ஒன்று என்பதோடு இதில் சுமார் 25,000 ட்ரூஸ் மக்கள் வசிக்கின்றனர். 1981ஆம் ஆண்டு சிரியாவிடம் இருந்த கோலன் ஹைட்ஸ் பிரதேசம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.