தொடரும் போர் பதற்றம் : முதன் முறையாக உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி – எப்போது தெரியுமா?
ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நாட்டிற்கு செல்ல இருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தொடங்கியது. கடந்த ஆண்டு, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்பிறகு, கடந்த மாதம் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி – பிரதமர் மோடி ஆகிய இருவரும் சந்தித்து பரஸ்பரமாக நலம் விசாரித்தனர். மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற மோடிக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
மூன்றாவது முறையாக பிரதமர் ஆன பின், மோடி தனது முதல் பயணமாக ரஷ்யாவுக்கு சென்றார். இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. பிரதமர் மோடி அதிபர் புதினை கட்டி அணைத்தது, ஏமாற்றத்தை அளித்தது மட்டுமல்லாமல் அமைதி பேச்சுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி பிரதமர் மோடி, உக்ரைன் செல்ல இருப்பதை டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. போருக்குப் பிறகு உக்ரைனுக்கு பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
அண்மையில், ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி, அமைதி மூலமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.