ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்
அடுத்த சில மாதங்களில் நாடளாவிய ரீதியில் 1,250 முக்கிய பாடசாலைகள் நட்பு பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த்(susil premjayantha) தெரிவித்தார்.
சீன அரசாங்கத்திடம் இருந்து 20 மில்லியன் டொலர்கள் மானியமாக பெறப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் உயர்தரப் பாடசாலையில் 1ஆம் தரம் தொடக்கம் 5ஆம் தரம் வரையிலான அனைத்து வகுப்பறைகளையும் சிநேகபூர்வ வகுப்பறைகளாக மாற்றும் வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
புதிய கல்வி முறை
அடுத்த வருடம் முதல் 1-6-10 ஆம் வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய கல்வி முறை தொடர்பான முன்னோடித் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தேவையான கற்றல் தொகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மாதிரி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் வாரங்களில் அவை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், பத்து ஆண்டுகளில் பாடசாலையை விட்டு வெளியேறும் குழந்தைகள் சவால்களை எதிர்கொள்ள முடியாத ஒரு குழுவாக மாறுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
யார் ஆசிரியர்களாக நியமனம்
எதிர்காலத்தில் அனைத்து கல்வியியற் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்றும் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
இதன்படி, 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் இளங்கலை கல்விப் பட்டம் பெற்றவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் எனவும், டிப்ளோமா பெற்றவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வேகமாக மாறிவரும் அறிவுக்கு ஏற்ப ஆசிரியர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொரு தொழில் வல்லுனர்களும் தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.