வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகை! ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு
வங்கிகளில் மக்கள் நகைகளை அடகு வைக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வுகளை வழங்கி வருகிறோம். பொருளாதாரம் வலுவடையும் போது எமது கஷ்டங்களுக்கான தீர்வுகள் கிடைக்கும். அண்மையில் தங்க நகைகளுக்கான சலுகைகளை வழங்கியுள்ளோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று எரிபொருள் விலை குறைந்துள்ளது, ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றோம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
காலி நகர சபை மைதானத்தில் நேற்று (27) நடைபெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.
நிலையை மாற்றினேன்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டில் பிரதமர் பதவியை ஏற்க எவரும் இல்லாத நிலையிலேயே எனக்கு வழங்கப்பட்டது. தெற்காசியாவில் முதல் முறையாக பிரதமர் பதவி யாசகம் செய்தது. நீங்கள் அடைந்த துயரங்களைக் கண்டுதான் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
உரம், எரிபொருள், எரிவாயு, பாடசாலை செல்லவும் வழியிருக்கவில்லை. நாட்டை ஏற்று இரு வருடங்களில் அந்த நிலையை மாற்றிக் காட்டினேன்.
கஷ்டமான காலத்திலேயே நாட்டை ஏற்றேன். உணவு பெற்றுத்தந்தோம். உரத்தை பெற்றுத்தந்தோம், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவாவிடம் உதவிகோரினேன்.
உலக வங்கியிடம் உதவி கோரினேன். ஜப்பானிடம் உதவி கோரினேன். இவ்வாறுதான் பயணத்தை முன்னெடுத்தேன்.
வலுவடையும் பொருளாதாரம்
உதவியைப் பெற்றுக்கொண்டுதான் இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுத்தேன்.
6 மாதங்களில் இந்த நிலையை மாற்ற முடியும் என்று நம்பினேன். கடன் பெற முடியாத வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை குறைந்துள்ளது.
பல பிரச்சினைகள் இன்றும் உள்ளன. மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வங்கிகளில் நகைகளை அடகு வைக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வுகளை வழங்கி வருகிறோம். பொருளாதாரம் வலுவடையும் போது எமது கஷ்டங்களுக்கான தீர்வுகள் கிடைக்கும்.
அண்மையில் தங்க நகைகளுக்கான சலுகைகளை வழங்கியுள்ளோம். நாட்டு மக்களின் கஷ்டங்களைக் கண்டு கவலைப்படுகிறோம். அதனை நிவர்த்திக்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.