;
Athirady Tamil News

கருக்கலைப்பு செய்துகொண்டவர் மீது கொலைக் குற்றச்சாட்டு… மானநஷ்ட வழக்கு தொடர்ந்த பெண்!

0

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு புகாரளித்து சிறையில் அடைத்ததால் புகாரளித்தவர்கள் மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுயமாகக் கருக்கலைப்பு செய்துகொண்டதாக பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி இரண்டு நாள்கள் சிறையில் அடைத்ததால் அந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரி ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

டெக்சாஸில் உள்ள ஸ்டார் கவுண்டியில் வசிக்கும் லிசெல்லே கோன்சலேஸ் என்கிற பெண், மருத்துவமனை ஊழியர்கள் தனது தனிப்பட்ட தகவலை வழக்கறிஞர்களுக்கும், உள்ளூர் அதிகாரிக்கும் வழங்கியதாகவும், தன் மீது கொலைக் குற்றம் சாட்டியதாகவும் சிவில் உரிமைகள் புகார் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

டெக்சாஸ் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கருக்கலைப்பு கட்டுப்பாடுகளின் கீழ், கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களுக்கு குற்றவியல் குற்றச்சாட்டுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சட்டத்தில் உள்ள 4-வது மற்றும் 14-வது திருத்தங்களை மீறியதாக வழக்கறிஞர்கள் ஆலன் ராமிரெஸ், லின் பரேரா மற்றும் ஸ்டார் கண்ட்ரி மாவட்ட அதிகாரி ரெனெ ஃபியூண்டஸ் ஆகியோரை வழக்கில் சேர்த்துள்ள கோன்சலேஸ் 1 மில்லியன் டாலர் இழப்பீடு கோரியுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் கருக்கலைப்பு செய்துகொண்ட கோன்சலேஸ் மருத்துவமனையில் இறந்த கருவை பிரசவித்ததாகக் கூறினார்.

வழக்கறிஞர்கள் மற்றும் ஸ்டார் கவுண்டி அதிகாரிகள் அலுவலகங்களுக்கு கருக்கலைப்புத் தொடர்பான வழக்குகளைப் புகாரளிக்க உள்ளூர் மருத்துவமனையுடன் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன என்று நீதிமன்ற ஆவணங்களில் கோன்சலேஸ் குற்றம் சாட்டினார். மேலும் பல பெண்களின் உடல்நிலை குறித்த தகவல்களும் பகிரப்பட்டிருக்கலாம் என்று கோன்சலேஸ் குற்றம் சாட்டினார்.

தன்னை சிறையிலடைத்த வழக்கில் நீதிபதிக்கு தவறான தகவல்களை வழக்கறிஞர்களும், அதிகாரிகளும் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டிய கோன்சலேஸ் 5 லட்சம் டாலர் மதிப்பிலான உறுதி பத்திரங்களை கொடுத்த பின்னரே தன்னை சிறையில் இருந்து 2 நாள்களுக்குப் பின்னர் விடுவித்ததாகவும், பின்னர் 2 நாள்களில் தன்மீதான குற்றம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அந்தக் கைதின் காரணமாக பல அவமானங்களைச் சந்தித்ததாக கூறும் கோன்சலேஸ் அவரது நிலைப்பாட்டை இது மிகவும் பாதித்ததாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் முன்னதாக வழக்கறிஞர் ராமிரெஸுக்கு 1250 டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம் அவரது உரிமத்தை 1 ஆண்டுகாலத்திற்கு ரத்து செய்துள்ளது.

வழக்கை தள்ளுபடி செய்ய ராமிரெஸ் மற்றும் பரேரா கோரிக்கை விடுத்தும் இதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.