இந்திய விமானம், ஹெலிகாப்டர்களை மீண்டும் பயன்படுத்தும் தீவு நாடு
இந்தியாவினால் அளிக்கப்பட்ட டோர்னியர் விமானம் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்களை மருத்துவ வெளியேற்ற சேவைகளுக்காக மாலத்தீவு மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
மாலத்தீவில் மூன்று விமான தளங்களை இயக்கி வரும் இந்திய ராணுவ வீரர்களை நாடு திரும்புவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ வெளியேற்ற சேவைகளை மீண்டும் தொடங்க உதவியதற்காக இந்தியாவிற்கு ஜனாதிபதி முகமது முய்சு நன்றி தெரிவித்துள்ளார்.
Dornier விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவ வெளியேற்ற சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை (MNDF) உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.
இம்முறை இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சிவிலியன் குழுவைக் கொண்டு இந்த சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோர்னியர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் முன்னதாக இந்திய ராணுவ வீரர்களால் இயக்கப்பட்டன, கடந்த ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி முய்ஸு பதவியேற்றவுடன் அவை நிறுத்தப்பட்டன.
மாலத்தீவில் மூன்று விமான தளங்களை இயக்கும் அனைத்து இந்திய ராணுவ வீரர்களையும் மே 10-ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சீன சார்புத் தலைவராகக் கருதப்படும் முய்சு வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகின.
இந்நிலையில், 59 வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன் தினம் இரவு இளைஞர் மையத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில் விமானங்கள் மூலம் மருத்துவ வெளியேற்றத்தை மீண்டும் தொடங்குவதாக ஜனாதிபதி முய்சு அறிவித்துள்ளார்.