;
Athirady Tamil News

டெல்லி IAS பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலி., இந்திய முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

0

டெல்லியில் சனிக்கிழமை மாலை பெய்த மழையால், பழைய ராஜேந்திரா நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது.

இரவு 7 மணிக்கு தகவல் கிடைத்ததும் (NDRF) அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவோடு இரவாக மீட்புப்பணி நடத்தப்பட்டது. ஆனால், சில நிமிடங்களில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீட்புப்படையினர், 14 மாணவர்களை பத்திரமாகவும், 3 மாணவர்களை சடலமாகவும் மீட்டனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?
சனிக்கிழமை மாலை பெய்த கனமழையால், இரவு ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் கட்டிடத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால், அடித்தள நூலகத்தின் பயோமெட்ரிக் கேட் பழுதடைந்தது.

இதன்காரணமாக 17 மாணவர்கள் நூலகத்திற்குள் இருட்டில் சிக்கிக் கொண்டனர்.

முதலில் கேட் மூடப்பட்டதால் அடித்தளத்தில் தண்ணீர் வரவில்லை, ஆனால் சில நிமிடங்களில் தண்ணீர் அழுத்தம் அதிகரித்து கேட் உடைந்தது. கேட் உடைந்ததால், அடித்தளத்தில் தண்ணீர் வேகமாக நிரம்பத் தொடங்கியது.

நீரோட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டுகளில் ஏறுவது சிரமமாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சில வினாடிகளில் தண்ணீர் முழங்கால் அளவு வந்தது. அத்தகைய சூழ்நிலையில் மாணவர்கள் பெஞ்சில் நின்றனர்.

இதையடுத்து, வெறும் 2-3 நிமிடங்களில் அடித்தளம் முழுவதும் 10-12 அடி தண்ணீர் நிரம்பியது.

பின்னர், சிக்கிக்கொண்ட மாணவர்களைக் காப்பாற்ற கயிறுகள் வீசப்பட்டன, ஆனால் தண்ணீர் அசுத்தமாக இருந்ததால், கயிறு தெரியவில்லை.

சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், கீழ்தளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.

சிறிது நேரம் கழித்து, சாலையில் இருந்து நீர் மட்டம் தணிந்ததும், அடித்தளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறத் தொடங்கியது.

மேலும், தீயணைப்பு வீரர்கள் ஒரு பம்ப்பை பயன்படுத்தி தண்ணீரை அகற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து, 3 மாணவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கபட்டன.

மீட்பு பணியின் போது பெஞ்ச் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால், மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இரவோடு இரவாக மீட்புப் பணி இறுதிக்கட்டத்தில் இருந்தபோது, ​​உள்ளே இன்னும் 7 அடி தண்ணீர் இருந்தது. 14 மாணவர்கள் கயிறுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக பயிற்சியாளர் அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2021-ஆம் ஆண்டில், ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்கு எம்சிடியால் சான்றிதழ் வழங்கப்பட்டது. அடித்தளத்தில் சேமிப்பு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அங்கு எந்த வியாபார நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பயிற்சி மையத்தில் உள்ள நூலகம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.