செய்தியாளர் சந்திப்பின் போது எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் ரத்தம் சிந்தியதால் பரபரப்பு
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தபோது, அவரது மூக்கில் ரத்தம் சிந்தியது. இந்த நிகழ்வு நேரலையாக சில ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குமாரசாமி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கர்நாடகாவில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளன. இது தொடர்பாக தனியார் ஓட்டலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
செய்தியாளர்களின் கேள்விக்கு குமாரசாமி பதில் அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவரது மூக்கில் ரத்தம் வழியத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக கையில் வைத்திருந்த கைக்குட்டையால் மூக்கை துடைத்தார். இருப்பினும் அவரது சட்டையில் இரத்த கரைகள் படிய தொடங்கின.
தற்போது இந்த நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பெங்களூருவில் இருந்து மைசூர் வரை மக்களை சந்தித்து பாதையாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் சூழலில், அந்த கட்சி செய்து வரும் ஊழல்களை மக்களுக்கு தெரியப்படுத்த இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுவதாக பாஜக முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த வார சனிக்கிழமையான ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த பாதயாத்திரை தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குமாரசாமியின் உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமரான தேவகவுடாவின் மகன்தான் இந்த குமாரசாமி என்பது கவனிக்கத்தக்கது. இவர் தற்போது மத்திய அமைச்சரவையில் கனரக தொழில் துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.