யாழ். இந்து ’08’ பிரிவு மாணவர்களால் சிறுவர் இல்லத்திற்கு உதவி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2008ஆம் ஆண்டு பிரிவு – பழைய மாணவர்களால் – திருநெல்வேலியிலுள்ள சிறுவர் இல்லத்துக்கு கடந்த சனிக்கிழமை உதவி வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில், 2008ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரம் கற்ற மாணவர்கள், ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ என்னும் தொனிப்பொருளில் தமது ஒன்றுகூடலை, யாழ். நகரிலுள்ள விடுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தியிருந்தனர்.
இதன்போது தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் மதிப்பளித்திருந்தனர்.
அதன்போது ஒன்றுகூடலின் ஓர் அங்கமாக சமூகநலத் திட்டமும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு அமைவாக திருநெல்வேலியிலுள்ள கருணாலயம் பெண்கள் சிறுவர் இல்லத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ஆடைகள் வழங்கப்பட்டன. அத்துடன் சிறுவர் இல்லத்துக்கு மதியபோசனத்துக்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் இ.செந்தில்மாறன் பங்கேற்றிருந்தார். அவர் உத்தியோகபூர்வமாக ஆடைகளை, இல்லத்தினரிடம் கையளித்ததுடன், 2008ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களால் சிறுவர் இல்லப் பிள்ளைகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.
இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, பாடசாலை மாணவிகளின் சுயகற்றலுக்கு தேவையான உதவிகள் வழங்குவதாகக் கூறியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.