முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
38 ரூபாவிற்கு வழங்குமாறு வர்த்தக அமைச்சர் உத்தரவிட்டுள்ள முட்டையை சுமார் ஒரு மாதத்தில் 38 ரூபாவிற்கும் குறைவான விலையில் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்குமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரட்ணசிறி அழககோன் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் 600,000 முட்டைகள் நுகர்வுக்குத் தேவையான நிலையில் தற்போது உற்பத்தியின் அளவு அதிகரித்துள்ளதாகவும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முட்டைகள் உபரியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி
இந்தியாவில்(india) இருந்து முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், முட்டை இறக்குமதிக்கான செலவை உள்ளூர் முட்டை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தினால், உள்ளூர் விவசாயி மட்டுமின்றி நுகர்வோரும் பாதுகாக்கப்படுவார்கள் என்றார்.
குறைவடைந்த உள்ளூர் முட்டை விலை
வர்த்தக அமைச்சு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு தலா 43 ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், தற்போது உள்ளூர் முட்டைகளை 42, 43, 44 ரூபாய்க்கு நுகர்வோர் வாங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.