திகில் பட பாணியில் கொடூர சம்பவம்… சிறார் உட்பட பலர் மீது வாள்வெட்டு
பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடந்த யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்து நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பிள்ளை ஒருவர் மரணம்
திகில் பட பாணியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் சிறார் உட்பட 8 பேர்கள் பலத்த காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் நடந்த எதிர்பாராத இச்சம்பவத்தில் தாய்மார்கள் அலறிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெளியான தகவலில் பெண் பிள்ளை ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்தில் திரண்டுள்ள அவசர மருத்துவ உதவிக்குழுவினர், காயமடைந்துள்ள அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
8 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானாலும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இது சிறார்களுக்கான யோகா மற்றும் நடன வகுப்புகள் நடத்தப்பட்ட பகுதி என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில்,
இளவயது பெண் பிள்ளைகளே தாக்குதலுக்கு இலக்கானவர்கள் என குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தை அடுத்து பொலிசார் சுற்றிவளைத்து தாக்குதல்தாரியை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்
சவுத்போர்ட் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் பட்டபகல் 11.50 மணிக்கு சம்பவம் நடந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, தகவல் அறிந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மட்டுமின்றி, துரிதமாக செயல்பட்ட அவசர மருத்துவ உதவிக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.