அனுமன் கோயிலை கட்டும் இஸ்லாமிய சகோதரர்கள்! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய தகவல்
தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் எதிர்ப்பையும் மீறி இஸ்லாமிய சகோதரர்கள் அனுமன் கோயிலை கட்டி வருகின்றனர்.
அனுமன் கோயில்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கே கொத்தாபேட்டா கிராமத்தை சேர்ந்தவர் அஜித் பாஷா. இவருக்கு பைரோஸ் மற்றும் சந்த் பாஷா ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்த இரு மகன்கள் தான் தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் திருப்பதி நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமான அனுமன் கோயிலை கட்டி வருகின்றனர்.
பைரோஸ் மற்றும் சந்த் பாஷா ஆகிய இரு இஸ்லாமிய சகோதரர்களின் தாத்தாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் அவர் ஒரு சாமியாரை சந்தித்துள்ளார். அவர், அனுமன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதன்படி, அவரும் அனுமன் கோயிலுக்கு சென்று வழிபட்டதால் பைரோஸ் மற்றும் சந்த் பாஷாவின் தந்தை அஜித் பாஷா பிறந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தெரிந்த அஜித் பாஷா அனுமன் கோயில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதற்கான பணியையும் அவர் கடந்த 2010 -ம் ஆண்டு தொடங்கியுள்ளார்.
ஆனால், அவரது சொந்த மதத்தில் உள்ளவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கோயில் கட்டும் பணி நின்றுவிட்டது.
தற்போது, அஜித் பாஷா காலமான நிலையில் அவரது கனவை நிறைவேற்றும் வகையில் பைரோஸ் மற்றும் சந்த் பாஷா ஆகியோர் அனுமன் கோவில் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சந்த் பாஜா கூறுகையில், “அனுமன் கோயிலை கட்டுவது பெருமையாக உள்ளது. எனது தந்தை அனுமன் கொடுத்த வரத்தால் தான் பிறந்துள்ளார். அவர் இந்த கோயிலை கட்ட நினைத்தார். ஆனால் அது தடைபட்டது.
அவரது கனவை நிறைவேற்றும் வகையில் இந்த கோயிலை கட்ட தொடங்கியுள்ளோம். அதற்கு உதவி தேவைப்படுகிறது. சிமெண்ட், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை பக்தர்கள் வழங்க வேண்டும்’’ என்றார்.