;
Athirady Tamil News

வயநாட்டில் நிலச்சரிவு: 125 பேர் உயிரிழப்பு

0

வயநாடு (கேரளம்): கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 125 பேர் உயிரிழந்தனர். 481 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மேலும் 90 பேரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பசுமை படர்ந்த மலைகள், வனங்கள் மற்றும் அருவிகளுக்குப் பெயர்பெற்ற மாவட்டம் வயநாடு. இங்கு கடந்த திங்கள்கிழமை வரை இயற்கை எழிலுடன் காட்சியளித்த முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட கிராமங்கள், செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சில மணி நேரத்தில் உருக்குலைந்தன.

வீடுகள் மண்ணில் புதையுண்டதோடு, சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இப்பேரழிவு நேரிட்டது.

மோசமான வானிலைக்கு இடையே ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

கனமழையால் நிலச்சரிவுகள்: கேரளம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் மேப்பாடி பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரிய பாறைகள் மற்றும் மண்ணுடன் கலந்துவந்த காட்டாற்று வெள்ளம், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழை ஆகிய கிராமங்களைச் சூழ்ந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், உயிரோடு புதைந்தனர்.

நிலச்சரிவின் கோரத் தாண்டவத்தால், பசுமை நிறைந்த இந்தக் கிராமங்கள் புதைநிலம் போல் மாறின. இப்பேரழிவில் 125 பேர் உயிரிழந்துவிட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தேடுதல்-மீட்புப் பணிகள்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் 300 வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல்-மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சகதியிலும் ஆறுகளிலும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு வருவதாக, மீட்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் பரிதவிப்பு: நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்கள், மேப்பாடி பகுதியில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றில் தங்களின் உறவினர்களின் உடல் இருக்கிறதா என்று குடும்பத்தினர் கண்ணீருடன் தேடி பரிதவித்த காட்சிகள், காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

2 நாள் துக்கம் அனுசரிப்பு: நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கேரளத்தில் மாநில அரசு சார்பில் 2 நாள்கள் (ஜூலை 30, 31) துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு கட்டடங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது; அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உதவிக் கரம் நீட்டுங்கள்: பினராயி விஜயன் வேண்டுகோள்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுகட்டமைக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் மாநில முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனைவரும் பங்களிக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

வயநாட்டில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் முதல் நிலச்சரிவும், அதைத் தொடர்ந்து 4 மணியளவில் அடுத்த நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தோரில் 93 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அண்டை மாவட்டமான மலப்புரத்தில் பாயும் சாலியாறில் இருந்து 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 18 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 45 முகாம்கள் அமைக்கப்பட்டு 3,069 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முண்டக்கை, சூரல்மலையில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து அவை துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளாறுமலை பகுதியில் உள்ள ஜிவிஹெச் பள்ளி முழுமையாகப் புதையுண்டுள்ளது. நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

மாநில அமைச்சர்கள் 5 பேர் மீட்பு-தேடுதல் பணியை ஒருங்கிணைத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2018-ஆம் ஆண்டில் மாநிலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பாதிப்புகளை சரிசெய்ய ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு உதவினர். அதேபோல், இப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வழியிலும் உதவுவதற்காக முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்றார் பினராயி விஜயன்.

முதல்வருடன் பிரதமர், உள்துறை அமைச்சர் பேச்சு

கேரள நிலச்சரிவு சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மாநில முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். தற்போதைய சூழலில் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று முதல்வரிடம் தாம் உறுதியளித்ததாக எக்ஸ் வலைதள பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000-ம் மத்திய அரசுத் தரப்பில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கேரள முதல்வருடன் பேசி நிலைமையைக் கேட்டறிந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.