வயநாடு நிலச்சரிவில் 222 பேர் உயிரிழப்பு.. தீவிர மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்
கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்பு 222 ஆக அதிகரித்துள்ள நிலையில் சூரல்மலையில் இரண்டாம் நாளாக நாய்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வயநாடு அடுத்த சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை முதலே தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சூரல்மலையில் பலர் மண்ணிற்குள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், மீட்பு பணிகளில் உதவுவதற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று, வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் 2ஆம் நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள், மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வரும் நிலையில் உணவுப் பொருட்களும் விநியோகிக்கப்படுகின்றன.
சூரல்மலையில் உள்ள சாலியாற்றில் தற்காலிக பாலம் அமைத்து மீட்பு படையினர் ஆற்றை கடந்து சென்றனர். முறையான சாலை, வலுவான பாலம் இல்லாத ஒரு சில இடங்களுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ராணுவ வீரர்கள் குழுவாக நடந்தே சென்று மக்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலைக்கு செல்லும் சாலையில், முஸ்லீம் லீக் சார்பில் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. கேரளா முஸ்லிம் லீக் சார்பில் கல்லாடி மக்காவில் 3 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.
60 பேர் கொண்ட குழுவினர் தயாரிக்கும் உணவுகள், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீட்பு பணிக்கு செல்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.