வயநாடு கொடுந்துயரம்: பெருமழை, வெள்ளத்தில் சிக்கித்தவித்த பெண்ணின் கடைசி நிமிடங்கள்!
வயநாடு நிலச்சரிவின் போது தங்களை காப்பாற்றுமாறு, தொலைபேசி மூலம் அழைத்து அறைகூவல் விடுத்த பெண் தற்போது உயிருடன் இல்லை.
முண்டக்கை பகுதியில் பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, இருவழஞ்சி ஆற்றில் சென்று கொண்டிருந்த வெள்ளத்தின் போக்கு திசை மாறி குடியிருப்புகளை நோக்கி பாய்ந்தது.
திங்களன்று நள்ளிரவு ஒரு மணியளவில், சூரல்மலை பகுதியில் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ள சாலையில் இருக்கும் வீட்டைச் சுற்றி தண்ணீர் பாய்வதை அறிந்த Neethu என்ற பெண்மணி, தான் பணியாற்றும், மருத்துவக் கல்லூரியை தொடர்பு கொண்டு உதவி கோரினார். அதே நேரம் அருகே இருந்த சுமார் ஏழு வீடுகளில் வசித்த மக்கள், நீத்துவின் வீட்டிற்குள் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்தனர்.
நிமிடத்திற்கு நிமிடம் வெள்ளத்தின் போக்கு தீவிரமடைந்ததால், மீண்டும் தான் பணியாற்றும் மருத்துவக் கல்லூரியை தொடர்பு கொண்டு கண்ணீருடன் தங்களது நிலைமையை விளக்கினார் நீத்து. நீத்து வீட்டுக்கு செல்லும் வழியில் இருந்த பாலம் உடைந்ததால், நண்பர்களால் அங்கு செல்ல முடியவில்லை.
நள்ளிரவு 2.50 மணிக்கு மீண்டும் மருத்துவக் கல்லூரியை தொடர்பு கொண்ட நீத்து, இப்போதைக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாது. எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அவர் நின்று பேசிக் கொண்டிருந்த வீட்டின் படுக்கை அறை மற்றும் வீட்டின் பாதிப் பகுதி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதில் நீத்து உயிரிழந்தார். எனினும் நல் வாய்ப்பாக நீத்துவின் கணவர், 5 வயது மகன் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் உயிர் தப்பினர். வீட்டின் மற்றொரு படுக்கை அறையில் அவர்கள் பாதுகாப்பாக இருந்ததால் உயிருடன் மீட்கப்பட்டனர்.